search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறுவை சாகுபடி"

    • எங்கள் ஆட்சிக் காலத்தில் மின்சாரம் பற்றாக்குறை இல்லாததால் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் டெல்டா மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டது.
    • காலத்திற்கு ஏற்ற தேவைகளைக் கருத்தில் கொண்டு இந்த தி.மு.க. அரசு குறுவை தொகுப்பை திட்டமிட்டு அறிவித்திருக்க வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவிரியில் 2023-2024-ம் ஆண்டுக்கான பங்கு நீரை வாதாடி பெற இயலாத தி.மு.க. அரசு, இந்த ஆண்டான 2024-25லும், மே மற்றும் ஜூன் மாதத்தில் நமக்கு வரவேண்டிய பங்கு நீரைப் பெறுவதற்கான எவ்வித முயற்சியையும் இதுவரை எடுக்கவில்லை என்று டெல்டா மாவட்ட விவசாயிகள் மிகுந்த கவலைக்குள்ளாகி, போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    அம்மாவின் அரசில், குறுவை சாகுபடிக்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறந்துவிட இயலாத சூழ்நிலை ஏற்பட்டபோது, குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

    எங்கள் ஆட்சிக் காலத்தில் மின்சாரம் பற்றாக்குறை இல்லாததால் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் டெல்டா மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டது.

    மேலும், விவசாயிகளுக்குத் தேவையான பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்தத் தேவையான பிளாஸ்டிக் பைப் போன்ற உபகரணங்கள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டது. பயிர்க் காப்பீடு செய்யப்பட்டது.

    மேலும், மேட்டூரில் இருந்து பாசன நீர் திறக்கப்படுவதில் உறுதியற்ற நிலை இருந்ததால், ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீர் வசதியுள்ள விவசாயிகள் மூலம் சமூக நாற்றங்கால் (கம்யூனிட்டி நர்சரி) முறையில் அரசு உதவியோடு நாற்றங்கால் வளர்க்கப்பட்டு ஒரு மாதத்திற்குப் பிறகு தண்ணீர் கிடைக்கும்போது விவசாயிகள் பிரச்சனையின்றி நெல் பயிர் செய்வதற்கு மானிய விலையில் நாற்றங்கால் வழங்கப்பட்டது. இது தவிர, மானிய விலையில் நெல் விதை, உரம் போன்ற இடுபொருட்களும் வழங்கப்பட்டது.

    காலத்திற்கு ஏற்ற தேவைகளைக் கருத்தில் கொண்டு இந்த தி.மு.க. அரசு குறுவை தொகுப்பை திட்டமிட்டு அறிவித்திருக்க வேண்டும். 14.6.2024 அன்று தி.மு.க. அரசால் அறிவிக்கப்பட்ட குறுவைத் தொகுப்பில் பெரும்பகுதி விதை நெல் மானியம் மற்றும் தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கும் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பாசனத்திற்கு தண்ணீரே இல்லாத நிலையில், விவசாயிகள் இந்த விதை நெல்லை வாங்கி எங்கே நாற்றங்கால் தயார் செய்வார்கள் என்ற அடிப்படை யோசனை கூட தி.மு.க. அரசிற்கு இல்லை.

    எங்களது ஆட்சியில் மழையும், பாசன நீரும் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டபோது, குறுவை சாகுபடிக்கு பயிர்க் காப்பீடு முழுமையாக செய்யப்பட்டு விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்பட்டது. ஆனால், இந்த தி.மு.க. அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு பயிர்க் காப்பீடு செய்யவில்லை.

    குறிப்பாக, சென்ற ஆண்டு குறுவை சாகுபடிக்கு பயிர்க் காப்பீடு செய்யப்படாததால் ஏக்கர் ஒன்றுக்கு பயிர்க் காப்பீட்டு நிவாரணமாக ரூ.35 ஆயிரம் கிடைக்காமலும், பயிர் பாதிப்புக்கு ஏற்ப காப்பீட்டு நிவாரணம் பெற முடியாமலும், டெல்டா விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகினர். இந்த ஆண்டும் குறுவை சாகுபடிக்கு பயிர்க் காப்பீடு செய்வது பற்றி எந்தவிதமான முன்னெடுப்பும் இல்லை.

    அதேபோல், ஆழ்துளைக் கிணறுகள் மூலம் கிடைக்கின்ற நீரை முறையாக பயன்படுத்தி சாகுபடி பரப்பை அதிகரித்து குறுவை பயிரைக் காப்பாற்ற மும்முனை மின்சாரத்தை தடையின்றி எங்களது அரசு வழங்கியது. ஆனால் இன்று, தமிழ் நாடு முழுவதும் மின்சாரம் முழுமையாக வழங்க இயலாத சூழ்நிலையில், டெல்டா பகுதியில் குறுவை சாகுபடிக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படுமா என்று இந்த குறுவைத் தொகுப்பில் எந்தக் குறிப்பும் இல்லை.

    எனவே, தி.மு.க. அரசு அறிவித்துள்ள குறுவைத் தொகுப்பு, தாங்கள் வகித்து வரும் 'இந்தியா' கூட்டணியில் உள்ள கர்நாடக காங்கிரஸ் அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு நலன்-குறிப்பாக டெல்டா விவசாயிகளின் நலன் கருதி, நமக்கு உரிய பங்கு நீரை பெறத் தவறிய தங்களது குற்றத்தை மறைப்பதற்கான கண்துடைப்பு வேலைதான் இந்த குறுவைத் தொகுப்பு அறிவிப்பு.

    இன்றைய அளவில், டெல்டா விவசாயிகளினுடைய தேவை என்ன என்பதை கண்டுகொள்ளாமல், அவசர கோலத்தில் இந்த குறுவை தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுப்பில் அறிவிக்கப்பட்டுள்ள சொற்ப நிதியான ரூ. 78.67 கோடியில், 24.50 கோடி மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு ஒதுக்கியது போக, மீதமுள்ள பணம் யானை பசிக்கு சோளப் பொறியாகத்தான் உள்ளது.

    இதனால் காவிரி டெல்டா விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்கவும் முடியாது. அவர்களின் துயரத்தைப் போக்கவும் முடியாது. இதுவும் தி.மு.க. அரசின் மக்களை ஏமாற்றும் அரசியல் நாடகங்களில் ஒன்று. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காவிரி நீர் கிடைக்காததால் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டது.
    • 4 மாவட்டங்களிலும் இதுவரை 1.75 லட்சம் ஏக்கரில் முன்பட்ட சாகுபடி தொடங்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    மேட்டூர் அணை 2020-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 4 ஆண்டுகளாக டெல்டா பாசனத்துக்கு உரிய காலத்தில் அதாவது ஜூன் 12-ந்தேதி திறக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த ஆண்டு ஜூன் 12-ந்தேதி திறக்கப்பட்டாலும், அணைக்கு நீர்வரத்து இல்லாததால், அக்டோபர் 10-ந்தேதி முற்றிலுமாக மூடப்பட்டது. கடந்த ஆண்டு தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய 167.25 டி.எம்.சி.யில் 78.07 டி.எம்.சி. தண்ணீரை மட்டுமே கர்நாடகம் வழங்கியது.

    இதனால், கடந்த ஆண்டு குறுவை பருவ நெல் சாகுபடிக்கு கூட முழுமையாக காவிரி நீர் கிடைக்காத நிலை ஏற்பட்டதால், மகசூல் இழப்பு ஏற்பட்டது. மேலும், காவிரி நீர் கிடைக்காததால் சம்பா சாகுபடியும் பாதிக்கப்பட்டது.

    குறுவை சாகுபடிக்கு சுமார் 100 டி.எம்.சி.யும், சம்பா சாகுபடிக்கு 230 டி.எம்.சி.யும் என மொத்தம் 330 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். ஆனால், மேட்டூர் அணையில் தற்போது நீர்மட்டம் 43.64 அடியும், நீர் இருப்பு 14.04 டி.எம்.சி.யும் மட்டுமே உள்ளது. இதை குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால், பாசனத்துக்கு மேட்டூர் அணையை கடந்த 12-ந்தேதி திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், 4 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை திறப்பு தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டது.

    இதன் காரணமாக ஆற்றுப் பாசனத்தை சார்ந்த விவசாயிகள் குறுவை சாகுபடியை தொடங்க முடியாத நிலையில் உள்ளதால், நிலங்கள் தரிசாகவே கிடக்கின்றன. இதனால் குறுவை சாகுபடி கேள்விக்குறியாகி உள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    இதனிடையே, டெல்டா மாவட்டங்களில் ஆழ்துளை கிணறு மோட்டார் பம்ப்செட் வசதியுள்ள விவசாயிகள் முன்பட்ட குறுவை சாகுபடியை முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களிலும் குறுவை சாகுபடியில் இயல்பான பரப்பளவு 3.50 லட்சம் ஏக்கராக இருந்தாலும், இந்த ஆண்டு மேட்டூர் அணை திறக்கப்படாததால், கிட்டத்தட்ட 3 லட்சம் ஏக்கருக்குதான் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.10 லட்சம் ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் 73 ஆயிரத்து 400 ஏக்கரிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 92 ஆயிரத்து 500 ஏக்கர் என்ற இலக்கில் 72 ஆயிரத்து 500 ஏக்கரிலும் நெல் பயிரிடப்பட்டுள்ளது.

    திருவாரூர் மாவட்டத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள 92 ஆயிரம் ஏக்கரில் இதுவரை 29 ஆயிரம் ஏக்கரிலும், நாகை மாவட்டத்தில் 1,125 ஏக்கரிலும் முன்பட்ட குறுவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த 4 மாவட்டங்களிலும் இதுவரை 1.75 லட்சம் ஏக்கரில் முன்பட்ட சாகுபடி தொடங்கப்பட்டுள்ளது.

    ஆழ்துளை குழாய் மோட்டார் பம்ப்செட் மூலம் மேற்கொள்ளப்படும் குறுவை சாகுபடிக்கும் நிலத்தடி நீர் ஆதாரம் மிக முக்கியமானதாக இருக்கிறது. தற்போது காவிரி நீருக்கு வாய்ப்பில்லாத நிலையில், தென்மேற்கு பருவமழை பெய்வதை பொருத்தே குறுவை சாகுபடியில் இலக்கை எட்ட முடியும். தொடர்ந்து பரவலாக மழை பெய்தால் மட்டுமே ஆழ்துளை குழாய் மூலம் செய்யப்படும் குறுவை சாகுபடியும் வெற்றிகரமாக அமையும் என்ற நிலை நிலவுகிறது.

    கர்நாடக அணைகள் நிரம்பி வழிந்து, உபரிநீர் பெருக்கெடுத்து வந்தால் மட்டுமே தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கமாக உள்ளது. தற்போது, அதற்கான வாய்ப்பு இல்லாத நிலையில் ஒரு போக சாகுபடிக்காவது காவிரி நீர் கிடைக்குமா? என்ற கேள்விக்குறியும் எழுந்துள்ளது.

    இதனால் காவிரியில் நமக்குரிய பங்கீடு கிடைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் விவசாயிகள் மத்தியில் மேலோங்கி உள்ளது.

    • காவிரி பாசன மாவட்டங்களுக்கு தண்ணீர் பெற்றுத்தர வேண்டிய கடமையில் தமிழ்நாடு அரசு தோற்றுவிட்டது.
    • வறட்சியால் பாதிக்கப்பட்ட குறுவை பயிர்களுக்கான இழப்பீட்டை அரசு தான் வழங்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவிரி பாசன மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக வாடிய சுமார் 40,000 ஏக்கர் குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.5,400 வீதம் இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். கர்நாடகத்திடமிருந்து உரிய காவிரி நீரை பெற்றுத் தர தவறியதால் 2 லட்சம் ஏக்கரில் குறுவை பயிர்கள் கருகி வரும் நிலையில், 40,000 ஏக்கருக்கு மட்டும் இழப்பீடு வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருப் பதை கண்துடைப்பாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.

    காவிரி பாசன மாவட்டங்களில் அறுவடை செய்ய தயாராகாத 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான குறுவைப் பயிர்களை காப்பாற்ற முடியாது. அவ்வாறு இருக்கும் போது 40 ஆயிரம் ஏக்கரில் மட்டும் தான் பாதிப்பு என்று எந்த வகையில் அரசு கணக்கிட்டது என்பது தெரியவில்லை.

    அதுமட்டுமின்றி, சேதமடைந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.5400 மட்டும் தான் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது உழவர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகும்.

    காவிரியில் தண்ணீர் வராததால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான பயிர்களுக்கும் ஏக்கருக்கு ரூ. 40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டிய தார்மிகக் கடமை தமிழக அரசுக்கு இரு வழிகளில் உள்ளது. முதலாவது, கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் இன்று காலை நிலவரப்படி கூட 66 டி.எம்.சி தண்ணீர் உள்ள நிலையில், அங்கிருந்து காவிரி பாசன மாவட்டங்களுக்கு தண்ணீர் பெற்றுத்தர வேண்டிய கடமையில் தமிழ்நாடு அரசு தோற்றுவிட்டது. அத்தகைய கடமை தவறுதலுக்காகவே தமிழக அரசு இழப்பீடு தர வேண்டும்.

    இரண்டாவதாக, குறுவை நெற்பயிர்களுக்கு தமிழக அரசு காப்பீடு வழங்கி யிருந்தால், தண்ணீரின்றி கருகிய பயிர்களுக்கு காப்பீடு நிறுவனங்களிடமிருந்து ஏக்கருக்கு அதிக பட்சமாக ரூ.30 ஆயிரம் இழப்பீடு கிடைத்திருக்கும். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை குறுவை நெல்லுக்கு காப்பீடு வழங்கப்பட்டு வந்தது.

    ஆனால், தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு குறுவைக்கு காப்பீடு வழங்குவது நிறுத்தப்பட்டுவிட்டது. அதுமட்டுமின்றி, குறுவை பயிர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அதை இயற்கைப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழக அரசு ஈடு செய்யும் என்று அறிவிக்கப் பட்டது. அந்த வகையில் வறட்சியால் பாதிக்கப்பட்ட குறுவை பயிர்களுக்கான இழப்பீட்டை அரசு தான் வழங்க வேண்டும்.

    பாதிக்கப்பட்ட குறுவை பயிர்களுக்கான இழப் பீட்டை வழங்கும் பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கும் நிலையில், வெறும் 40,000 ஏக்கருக்கு மட்டும் ஏக்கருக்கு ரூ.5400 மட்டும் இழப்பீடு வழங்குவது எந்த வகையில் நியாயம்? இந்த தொகை நடவு நட்ட செலவை ஈடு செய்வதற்குக் கூட போதுமானதல்ல.

    ஓர் ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய ரூ.25,000 வரை செலவு ஆவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. என்.எல்.சி நிறுவனத்தால் கடலூர் மாவட்டத்தில் நெற்பயிர்கள் அழிக்கப்பட்ட போது, அப்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.

    அவற்றைக் கருத்தில் கொண்டு, வறட்சி யால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் ஏக்கர் பரப்பளவி லான குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வழக்கத்தை விட அதிகமாக 5.10 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் குறுவை பருவ நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்டன.
    • இதுவரை சுமார் 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மட்டுமே அறுவடை நடைபெற்றுள்ளது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்வதற்காக, மேட்டூர் அணையிலிருந்து தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடப்பாண்டிலும் ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டதால், வழக்கத்தை விட அதிகமாக 5.10 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் குறுவை பருவ நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்டன.

    ஆனால், தென்மேற்கு பருவமழை பொய்த்ததால், கர்நாடக அணைகளில் இருந்து எதிர்பார்த்த அளவுக்கு தண்ணீர் திறக்கப்படாததால், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே குறுவைப் பயிர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்கவில்லை. இயற்கை கை கொடுத்தாலோ, உச்சநீதிமன்றம் நீதி வழங்கினாலோ, குறுவை பயிர்களை பெரிய அளவில் பாதிப்பின்றி காப்பாற்றி விடலாம் என்று உழவர்கள் நம்பிக்கொண்டிருந்த நிலையில் எல்லா வாய்ப்புகளும் நழுவி விட்டன; நம்பிக்கைகள் பொய்த்து விட்டன.

    காவிரி பாசன மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் குறுவை நெற்பயிர்கள் பயிரிடப்பட்டிருந்த நிலையில், இதுவரை சுமார் 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மட்டுமே அறுவடை நடைபெற்றுள்ளது.

    காவிரியில் தண்ணீர் இல்லாததால் இரண்டு லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை பயிர்கள் கருகும் நிலையில், அறுவடை செய்யப்பட்ட பகுதிகளிலும் கூட தண்ணீர் பற்றாக்குறை காரணமாக போதிய விளைச்சல் கிடைக்கவில்லை. காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக ஆய்வு செய்து வரும் வேளாண்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்ட போதிலும் கூட, உறுதியாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது காவிரி பாசன மாவட்ட உழவர்களுக்கு ஏமாற்றமளித்திருக்கிறது.

    கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியில் என்.எல்.சி நிறுவனத்தால் குறுவை பயிர்கள் அழிக்கப்பட்டபோது ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. அதையே அளவுகோலாகக் கொண்டு தண்ணீர் இல்லாமல் கருகிய குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். விளைச்சல் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கும், பாதிப்பின் மதிப்பை கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை போன்ற காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில், கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
    • குறுவை நெற்பயிர்களுக்கான இழப்பீடு மற்றும் நிவாரண தொகையை காலதாமதம் இல்லாமல் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் வலியுறுத்துகிறது.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி, தமிழகத்திற்கு தரவேண்டிய காவிரி நீரை, கர்நாடக அரசு முறையே கொடுக்க தவறிய காரணத்தினால் விவசாயிகள் மிகவும் மனக்கஷ்டத்திலும், பொருளாதார நஷ்டத்திலும் இருக்கிறார்கள்.

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை போன்ற காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில், கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டாலும், போதுமான தண்ணீர் கடை, மடை பகுதிகளுக்கு வந்து சேரவில்லை. இதனால் குறுவை சாகுபடி பெரும் அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகளின் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கருகிப் போயிருப்பதாக கண்ணீர் வடிக்கிறார்கள்.

    எனவே பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிர்களுக்கான இழப்பீடு மற்றும் நிவாரண தொகையை காலதாமதம் இல்லாமல் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் வலியுறுத்துகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தஞ்சை மாவட்டத்தில் இலக்கை விஞ்சி 1.6 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டன.
    • தமிழகத்திற்கு உரிய நீரை வழங்காமல் கர்நாடகா தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை பாசனத்துக்காக கடந்த ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    சரியான தேதியில் திறக்கப்பட்டதாலும், குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டதாலும் விவசாயிகள் நம்பிக்கையுடன் சாகுபடியை மேற்கொண்டனர். 5½ லட்சம் ஏக்கரில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் 5.20 லட்சம் ஏக்கரை தாண்டி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சை மாவட்டத்தில் இலக்கை விஞ்சி 1.6 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டன.

    இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைய தொடங்கியது. இன்றைய நிலவரப்படி 47 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது.

    மேலும் கர்நாடகா அரசும் தமிழத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்காமல் வஞ்சித்து வருகிறது. இதனால் போதிய தண்ணீரின்றி டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் கருக தொடங்கின.

    உரிய நீரை வழங்கக்கோரி விவசாயிகள் பலகட்ட போராட்டங்களை நடத்தியும் பலன் இல்லை. தமிழ்நாடு அரசும் அழுத்தம் கொடுத்தும் கர்நாடகா அரசு தண்ணீர் வழங்க மறுத்து வருகிறது.

    காவிரியில் இருந்து உரியநீரை வழங்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தது. அந்த வழக்கு வருகிற 21-ந் தேதி புதிய அமர்வில் விசாரணைக்கு வருகிறது.

    இப்படி விவசாயிகள் போராட்டம் வழியாகவும், தமிழ்நாடு அரசு சட்ட ரீதியாகவும் உரிய நீரை பெற போராடி வருகிறது.

    இந்த சூழ்நிலையில் போதிய தண்ணீரின்றி பாதிக்கப்பட்ட குறுவை பயிர்களின் நிலைகள் குறித்து நேற்று தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்பட டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் உத்தரவுப்படி வேளாண் அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்தனர். அப்போது விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை ஆய்வு அறிக்கையாக தயார் செய்தனர்.

    இன்று சென்னையில் குறுவை சாகுபடி பாதிப்பு, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அந்த கூட்டத்தில் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்த வேளாண் அதிகாரிகள் விவசாயிகளின் கோரிக்கைகள் அடங்கிய அறிக்கைகளை சமர்பிக்கின்றனர்.

    இந்த கூட்டத்தின் முடிவில் குறுவை சாகுபடி பாதிப்புக்கு வழங்க வேண்டிய நிவாரணம் குறித்து அறிவிப்பு வெளியாகுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

    இந்நிலையில் டெல்டாவில் பாதிக்கப்பட்ட குறுவை பயிர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்தும், அடுத்து சம்பா சாகுபடியை உறுதியாக தொடங்கலாமா என்பது குறித்தும் விவசாயிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அதன் பற்றிய விவரம் வருமாறு:-

    விவசாய தொழிலாளர் சங்க துணை தலைவர் ஜீவக்குமார்:

    தமிழகத்திற்கு உரிய நீரை வழங்காமல் கர்நாடகா தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் இலக்கை மிஞ்சி சாகுபடி செய்யப்பட்டாலும் தண்ணீரின்றி பெரும் அளவில் பயிர்கள் பாதிப்புகுள்ளாகின. டெல்டா மாவட்டம் முழுவதும் இதே நிலை தான்.

    ஏற்கனவே ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்கான தண்ணீரை மிக மிக குறைந்த அளவே வழங்கியது. இவ்வளவுக்கும் கோர்ட் உத்தரவிட்டும் அதனை கண்டு கொள்ளவில்லை. இதனால் உரிய நீரின்றி டெல்டாவில் குறுவை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    இதே நிலை நீடித்தால் பயிர்களின் பாதிப்பு அதிகமாவதோடு நிலத்தடி நீர் மட்டமும் கணிசமாக குறையும் அபாயம் உள்ளது. இன்னும் சில நாட்களில் தண்ணீர் வரத்து முற்றிலும் குறையும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி இருந்தால் பயிர்கள் முற்றிலும் கருகி விடும். கடன் வாங்கி சாகுபடி செய்த பயிர்கள் வீணாகி வருகிறதே என ஒவ்வொரு விவசாயிகளும் கவலையில் உள்ளனர்.

    எனவே இன்று சென்னையில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் டெல்டாவில் பாதிக்கப்பட்ட குறுவை பயிர்களுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும். அடுத்து சம்பா சாகுபடியை தொடங்கலாமா? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். மேலும் சம்பா சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும்.

    தற்போது எஞ்சிய பயிர்களை காப்பாற்றவதற்காக நீர் கிடைக்குமா என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர். 

    • தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் 3.50 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
    • தஞ்சை மாவட்டத்தில் கல்லணை மற்றும் கல்லணைக்கால்வாய் புனரமைப்பு பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார்

    தஞ்சாவூர்:

    காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை பாசன சாகுபடிக்காக கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. அதன்படி தண்ணீர் கல்லணையை வந்தடைந்ததும் அங்கிருந்து 16-ந் தேதி டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக காவிரி, வெண்ணாறு கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதையடுத்து தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் 3.50 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இலக்குகளை மிஞ்சி சாகுபடி பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பல இடங்களில் பயிர்கள் கருகி வருகின்றன. இந்தநிலையில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் தடையின்றி வழங்குவது தொடர்பாக திருச்சி மண்டல தலைமை பொறியாளர் சுப்பிரமணியன் நேற்று தஞ்சை மாவட்டத்தில் கல்லணை மற்றும் கல்லணைக்கால்வாய் புனரமைப்பு பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார்.

    அப்போது அவர், தஞ்சை, பூதலூர் மற்றும் ஒரத்தநாடு வட்டங்களில் கல்லணை கால்வாய் புனரமைப்பு பணி முடிவடைந்துள்ளது.குறுவை சாகுபடிக்கு தடையின்றி தண்ணீர் வழங்க வேண்டும் என நீர்வளத்துறை பொறியாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். ஆய்வின்போது கல்லணை கால்வாய் கோட்ட செயற்பொறியாளர் பவளக்கண்ணன், உதவி செயற்பொறியாளர்கள் சீனிவாசன், இளங்கண்ணன், உதவி பொறியாளர்கள் சேந்தன், சூரிய பிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • பூதலூர் வட்டார பகுதிகளில் குறுவை சாகுபடி பணிகள் 9 ஆயிரம் ஏக்கர் பரப்பில் முடிவடைந்து உள்ளது.
    • பருவம் தப்பிய கடும் வெயில் காரணமாக விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

    பூதலூர்:

    பூதலூர் வட்டார பகுதியில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஆடி மாதத்தில் கடுமையான வெயில் அடித்து வருகிறது.

    வெயிலுடன் அவ்வப்போது கடுமையான காற்றும் வீசுகிறது.

    பூதலூர் வட்டார பகுதிகளில் குறுவை சாகுபடி பணிகள் 9 ஆயிரம் ஏக்கர் பரப்பில் முடிவடைந்து உள்ளது.

    இந்த வாரத்தில் குறுவை சாகுபடி முழுமையாக முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.

    தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை பயிரில் ஆடிப் பருவத்தில் வீசும் காற்று, பருவம் தப்பிய கடும் வெயில் காரணமாக புது விதமான பூச்சி தாக்குதல் ஏற்படக்கூடும் என்று விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

    வேளாண்துறையினர் குறுவை சாகுபடி வயல்கள் உன்னிப்பாக கவனித்து விவசாயிகளுக்கு உரிய அறிவுரை வழங்கி நல்ல நிலையில் குறுவை பயிர்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர் பார்க்கின்றனர்.

    • விவசாயிகள் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற் கொண்டுள்ளனர்.
    • தண்ணீர் இல்லாததால் மேற்கொண்டு செலவு செய்தாலும் நெற்பயிர்கள் வளர்ந்து பலன் கொடுக்குமா என தெரியவில்லை

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்த மணலி ஊராட்சியில் பரப்பாகரம் கிராமம் உள்ளது. இந்த கிராமமானது அரிச்சந்திரா ஆற்றில் இருந்து பிரியும் ராசன் வாய்க்கால் மூலம் பாசனம் பெறக்கூடிய கிராமமாகும்.

    இந்நிலையில், இங்குள்ள விவசாயிகள் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற் கொண்டுள்ளனர்.

    மேட்டூர் அணை கடந்த மாதம் (ஜூன்) 12-ந் தேதி திறக்கப்பட்டது. அதன் பின்னர் அரிச்சந்திரா ஆற்றில் ஒருமுறை தான் தண்ணீர் வந்தது. தொடர்ச்சியாக தண்ணீர் வராததால் ராசன் வாய்க்காலிலும் தண்ணீர் குறைந்தளவே இருந்தது.

    இந்நிலையில், நேரடி தெளிப்பு மூலம் பயிரிடப்பட்ட குறுவை நெற்பயிர்கள் முளைத்து தண்ணீரின்றி கருகத் தொடங்கின. இதனால் சாகுபடி செய்த விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்தனர்.

    இந்நிலையில், செல்வம் என்கிற விவசாயி தனக்கு சொந்தமான 2 ஏக்கர் பரப்பளவில் ரூ.10 ஆயிரம் செலவு செய்து குறுவை சாகுபடி மேற்கொண்டுள்ளார். தற்போது தண்ணீர் இல்லாததால் மேற்கொண்டு செலவு செய்தாலும் நெற்பயிர்கள் வளர்ந்து பலன் கொடுக்குமா என தெரியவில்லை என கருதி சாகுபடி செய்யப்பட்ட வயலில், டிராக்டரை கொண்டு உழவு செய்து முளைத்து தண்ணீரின்றி கருகிய நெற்பயிர்களை அழித்தார்.

    எனவே, அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • குறுவை தொகுப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் வழங்கப்பட்டது.
    • 43 கிராமங்களில் 6 ஆயிரத்து 500 ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டது.

    நாகப்பட்டினம்,

    நாகப்பட்டினம் கீழ்வேளூரில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) தேவேந்திரன் தலைமை தாங்கினார்.

    வட்டார ஆத்மா குழு தலைவர் கோவிந்தராசன் முன்னிலை வகித்தார். கீழ்வேளூர் வட்டார அளவில் 43 கிராமங்களில் 6 ஆயிரத்து 500 ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் 100 சதவீத மானியத்தில் 20 விவசாயிகளுக்கு யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ் உரங்கள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் கீழ்வேளூர் வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) ராஜலட்சுமி, ஒன்றியக்குழு தலைவர் வாசுகி நாகராஜன், துணைத்தலைவர் புருஷோத்தமதாஸ், பேரூராட்சி மன்ற தலைவர் இந்திராகாந்தி, துணைத் தலைவர் சந்திரசேகரன், ஆத்மாகுழு உறுப்பினர்கள் பழனியப்பன், அட்சயலிங்கம், துணை வேளாண்மை அலுவலர் பிரான்சிஸ், உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • காவிரி நீரை நம்பியிருக்கும் ஒகேனக்கல் அருவியில் தற்போது நீர்வரத்து குறையத் தொடங்கியுள்ளது.
    • கர்நாடகாவின் போக்கை கடுமையாக கண்டித்து, தமிழக உரிமையை நிலைநாட்ட தமிழக அரசு போராடி இருக்க வேண்டும்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசு, கர்நாடக அரசிடம் பெற வேண்டிய காவிரி நீர் விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுத்து, தமிழக விவசாயிகளின் குறுவை சாகுபடிக்கு உதவிட வேண்டும். காவிரி நீரை நம்பியிருக்கும் ஒகேனக்கல் அருவியில் தற்போது நீர்வரத்து குறையத் தொடங்கியுள்ளது.

    இதனால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். கர்நாடக துணை முதல்-மந்திரி, முதல்-மந்திரி ஆகியோர் காவிரி நீர் விவகாரத்தில், மேகதாது அணைப் பிரச்சினையில், தமிழகத்துக்கு எதிரான போக்கை கடைபிடிக்கின்ற வேளையில் தமிழக தி.மு.க உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் செயல்பாடுகள் யார் பக்கம். கர்நாடக காங்கிரஸ் பக்கமா அல்லது தமிழக விவசாயிகள் பக்கமா.

    அதாவது கர்நாடகாவின் போக்கை கடுமையாக கண்டித்து, தமிழக உரிமையை நிலைநாட்ட தமிழக அரசு போராடி இருக்க வேண்டும். எனவே காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகாவின் அத்துமீறிய பேச்சை, செயலை கண்டித்து, ஜூன், ஜூலை மாதத்துக்கான தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசை தமிழக அரசு வற்புறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • குறுவை சாகுபடி செய்ய முடியாத சூழலும் ஏற்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
    • கர்நாடக அரசு ஜூன், ஜூலை மாதத்துக்கு மட்டும் தமிழகத்துக்கு சுமார் 41 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால், திறக்கப்படும் தண்ணீரின் அளவு 12 டி.எம்.சி ஆக குறைந்துள்ளதால், நாத்து நடும் விவசாயிகள் நடவு செய்யாமல் விட்டு விடலாமா என்ற கவலையில் உள்ளனர். மேலும் குறுவை சாகுபடி செய்ய முடியாத சூழலும் ஏற்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

    கர்நாடக அரசு ஜூன், ஜூலை மாதத்துக்கு மட்டும் தமிழகத்துக்கு சுமார் 41 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும். அப்படி திறந்தால் தான் விவசாயிகள் தொடர்ந்து நடவு செய்து, குறுவை சாகுபடியை மேற்கொள்ள முடியும். எனவே தமிழக அரசு, கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு பெற வேண்டிய ஜூன், ஜூலை மாதத்துக்கான காவிரி நீரை முழுமையாகப் பெற உடனடி நடவடிக்கையை மேற்கொண்டு, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×